Last Updated:
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிடும் என்ற நிலையில் கொல்கத்தா அணி இந்த போட்டியை எதிர்கொண்டது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி டெல்லி கேபிடல்சை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
வலுவான டெல்லி அணியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணி வென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 48 ஆவது லீக் போட்டியாக டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் தொடரிலிருந்து ஏறக்குறைய வெளியேறிவிடும் என்ற நிலையில் கொல்கத்தா அணி இந்த போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். குர்பாஸ் 12 பந்துகளில் 1 சிக்சர் 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்தார். நரைன் 16 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இளம் வீரர் ரகுவன்ஷி 32 பந்துகளில் 44 ரன்களும், ரின்கு சிங் 25 பந்துகளில் 36 ரன்களும் சேர்த்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இந்த கொல்கத்தா அணி 204 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
அந்த அணியின் டூப்ளசிஸ் 45 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். கேப்டன் அக்சர் படேல் 23 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கே.எல். ராகுல் 7 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த்து. இதன் மூலம் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது.
April 29, 2025 11:52 PM IST


