Last Updated:
தற்போது வரை 10 அணிகளில் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 11 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 59ஆவது லீக் போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். பிரியன்ஷ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த மிச்சல் ஓவன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். 3.1 ஓவரில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதையடுத்து இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் – நேகல் வதேரா இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.
கேப்டன் ஸ்ரேயாஸ் 25 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தலா 5 சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய நேஹல் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசி ஓவர்களில் சஷாங்க் சிங் 30 பந்துகளில் 59 ரன்களும், அஸ்மதுல்லா 9 பந்துகளில் 21 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 219 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்சி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்கள். 4.5 ஓவரில் அணி 76 ரன்கள் எடுத்திருந்தபோது ராஜஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டாக சூர்யவன்சியை இழந்தது.
அவர் 15 பந்துகளில் தலா 4 சிக்ஸர், பவுண்டரியுடன் 40 ரன்கள் அதிரடியாக சேர்த்திருந்தார். அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த சஞ்சு சாம்சன் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தனர்.
துருவ் ஜுரல் 53 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு ஆட்டம் சென்றது. இந்த ஓவரில் ராஜஸ்தான் அணியால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அற்புதமாக கடைசி ஓவரை வீசிய மார்க்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 11 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
இதன் மூலம் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி தற்போது 17 புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளன.
தற்போது வரை 10 அணிகளில் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 4 அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. அடுத்ததாக லக்னோ மற்றும் டெல்லி அணிகள் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


