Last Updated:
கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றிக்கு தேவைப்படும் ரன் ரேட் எகிறத் தொடங்கியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 39 ஆவது லீக் போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி விக்கெட்டை இழக்காமல் ரன்கள் சேர்த்தனர். சாய் சுதர்சன் 36 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் 55 பந்துகளில் மூன்று சிக்ஸர் 10 பவுண்டரியுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராகுல் டெவாட்டியா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற ஜாஸ் பட்லர் மற்றும் ஷாருக்கான் இணை கடைசி ஓவர்களில் அதிரடியாக ரன்கள் சேர்த்தது. பட்லர் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 198 ரன்கள் குவித்தது. இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
தொடக்க வீரர் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த சுனில் நரேன் கேப்டன் அஜிங்கியா ரஹானே இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சுனில் நரேன் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். 19 பந்துகளை எதிர் கொண்ட வெங்கடேஷ் ஐயர் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தேவைப்படும் ரன் ரேட் எகிறத் தொடங்கியது. கேப்டன் அஜிங்கியா ரஹானே 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க – CSK | சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லுமா? புள்ளிப்பட்டியலில் இருக்கும் வாய்ப்பு என்ன?
ரின்கு சிங் 17 ரன்களும், ஆண்ட்ரே ரசல் 21 ரன்களும் எடுத்தனர். ரமன் தீப் சிங் 1 ரன்னில் ஆட்டமிழக்க மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கடைசி ஓவர்களில் அங்ரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக 13 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 159 ரன்கள் எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
April 21, 2025 11:45 PM IST


