Last Updated:
சென்னை அணியில் இடம்பெற்ற விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் வன்ஷ் பெடி காயம் காரணமாக விலகியுள்ளார்.
சென்னை அணியில் இளம் விக்கெட் கீப்பர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் தோனிக்கு மாற்று வீரராக வரும் காலத்தில் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் இந்த சீசன் மறக்க வேண்டிய ஒன்றாக அமைந்து விட்டது. இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
கடந்த வாரமே முதல் அணியாக சிஎஸ்கே வெளியேறிய நிலையில் மீதம் உள்ள போட்டிகளிலாவது அணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. பல போட்டிகளுக்கு பின்னர் ஆர்சிபிக்கு எதிராக நடந்த கடைசி போட்டியில்தான் சென்னை அணி மிகவும் உத்வேகத்துடன் விளையாடியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னை அணியில் ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத், டெவால்ட் ப்ரூவிஸ், பதிரனா, சாம் கரன் உள்ளிட்ட வீரர்கள் ஃபார்முக்கு வந்துள்ளனர். கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த சீசனில் தோனி சென்னை அணிக்காக கோப்பையை வென்றெடுத்த பின்னர் ஓய்வை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அணியில் இடம்பெற்ற விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் வன்ஷ் பெடி காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை அணி உர்வி படேல் என்ற இளம் வீரரை ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்காத நிலையில், 26 வயதாகும் உர்வில் படேலை சென்னை அணி ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒருவேளை தோனி ஓய்வு பெற்றால் அவரது இடத்தில் விக்கெட் கீப்பராக உர்வில் படேல் செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 28 பந்துகளில் உர்வில் படேல் சதம் அடித்து குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த உர்வில் படேல் 47 டி20 போட்டிகளில் விளையாடி 1162 ரன்கள் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 170.38. இவற்றில் 2 சதங்களும் 4 அரை சதங்களும் அடங்கும்.


