Last Updated:
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளது சென்னை அணி.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பௌலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரசீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே களமிறங்கினர். ஷேக் ரஷீத் 11 ரன்னிலும், மாத்ரே 7 ரன்னியில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவர்களை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு இணைந்த சாம் கரன் மற்றும் டெவல்டு ப்ரூவிஸ் இணை பஞ்சாப் பந்துவீச்சை சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கியது.
இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ப்ரூவிஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, சிவம் தூபே 6 ரன்னிலும், தோனி 11 ரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்னிலும் வெளியேறினர். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் குவித்த சாம் கரன் அரைசதம் கடந்தார்.
47 பந்துகளை எதிர்கொண்ட அவர் நான்கு சிக்சர், 9 பவுண்டரியுடன் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்கள் குவித்தது. 19 ஆவது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் கடைசி 3 பந்துகளில் விக்கெட்டை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 15 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அதிரடியாக ரன்கள் சேர்த்த மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 3 சிக்சர், 5 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். சஷாங்க் சிங் 12 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
April 30, 2025 11:35 PM IST


