Last Updated:
களத்தில் தோனி – ரவிந்திர ஜடேஜா இணை இருந்தபோது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிக நம்பிக்கை காணப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த ராஜஸ்தான் அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களும், சஞ்சு சாம்சன் 20 ரன்னும் எடுத்து வெளியேறினர். அடுத்து இணைந்த கேப்டன் ரியான் பராக் – நிதிஷ் ரானா இணை பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தது.
36 பந்துகளை எதிர்கொண்ட நிதிஷ் ரானா 5 சிக்சர் 10 பவுண்டரியுடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பராக் 37 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்கோர் 200 ரன்களை எளிதாக தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை அணியின் துல்லியமான பந்து வீச்சால் ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
ஓபனிங் பேட்ஸ்மேன் ரச்சின் ரவிந்திரா ரன் ஏதும் எடுக்காமல் ஜோஃப்ரா ஆர்ச்சர் வேகத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து இணைந்த திரிபாதி – ருதுராஜ் இணை விக்கெட்டை காப்பாற்றி ரன்களை குவித்தது. 19 பந்துகளில் 1 சிக்சர் 3 பவுண்டரியுடன் திரிபாதி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சிவம் துபே 2 சிக்சருடன் 18 ரன்னில் வெளியேற அரைசதம் கடந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார். விஜய் சங்கர் 9 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் 44 பந்தில் 63 ரன்கள் எடுத்திருந்தபோது ஹசரங்கா பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதையும் படிங்க – மீண்டும் ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொள்கிறது இந்திய அணி..! வெளியானது அட்டவணை
களத்தில் தோனி – ரவிந்திர ஜடேஜா இணை இருந்தபோது ரசிகர்கள் மத்தியில் அதிக நம்பிக்கை காணப்பட்டது. ஆனால் சந்தீப் சர்மா பவுலிங்கில் தோனி 16 ரன்னில் ஆட்டமிழந்தபோது ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.
கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்டபோது சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2019 ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணி 180+ ரன்களை சேஸிங் செய்வதில் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.
March 30, 2025 11:57 PM IST


