Last Updated:
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் தடை விதித்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் ரூ. 6.25 கோடிக்கு வாங்கிய நிலையில், அவர் தனிப்பட்ட காரணங்களால் விலகினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஹாரி புரூக். 26 வயதாகும் இவர் 20 ஓவர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இவர், அணி உரிமையாளர்களின் கவனத்தைப் பெற்றார். ஹாரி புரூக்கை தங்களது அணியில் எடுப்பதற்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மத்தியில் போட்டி காணப்பட்ட நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை ரூ. 6 கோடியே 25 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தான் நடப்பு ஐபிஎல் தொடரை தவிர்ப்பதாக ஹாரி புரூக் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹாரி புரூக் விலகுவதாக அறிவித்ததை பிசிசிஐயிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது. தற்போது ஹாரி புரூக்கருக்குப் பதிலாக மாற்று வீரரை டெல்லி கேபிடல்ஸ் அணி தேர்வு செய்ய வேண்டும்.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் ஒரு வீரர் போட்டியில் இருந்து காயம் அல்லாத பிற காரணத்தால் விலகுவார் என்றால் அவரை 2 ஐபிஎல் சீசன்களில் விளையாட தடை செய்யலாம் என்று பிசிசிஐ விதி கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய விதிப்படி தற்போது ஹாரி புரூக்கிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து பிசிசிஐ அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Also Read | கிரிக்கெட் உலகில் சோகம்.. 2 வயது மகளை இழந்த வீரர்.. சக வீரர் பகிர்ந்த துயரமான செய்தி!
ஹாரி புரூக் விலக என்ன காரணம்?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹாரி புரூக் விளையாடி வருவதால் அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஐபிஎல் போட்டியை தவிர்த்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஹாரி புரூக்கின் பாட்டி உயிர் இழந்தார். அதனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஐபிஎல் போட்டியை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது என்பது கவனிக்கத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 14, 2025 6:35 PM IST