Last Updated:
ஒரு மாதத்திற்கு மேலாக ரோபோ நாய் மைதானத்தில் வலம் வந்த நிலையில், தற்போது பிசிசிஐ மீது வழக்கு பாய்ந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதிக்கும் அதிகமான ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், பிசிசிஐ மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ரோபோ நாய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து விளக்கம் அளிக்கக் கோரி பிசிசிஐக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் பிசிசிஐ பல்வேறு புதுமைகளை ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக புகுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு ஐபிஎல் சீசனில் ரோபோ நாய் ஒன்றை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.
இந்த நாய்க்கு சம்பக் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. ரோபோ நாயின் உடலைச் சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவை போட்டிகளையும் வீரர்களையும் வெவ்வேறு கோணங்களில் படம் எடுத்து கொடுக்கும். மேலும், ஒவ்வொரு வீரர்களின் செயல் திறன் தரவு உள்ளிட்டவற்றையும் இந்த சம்பத் ரோபோ நாய் கொண்டுள்ளது.
இந்த நாய்க்கு சார்ஜ் ஏற்ற வேண்டிய அவசியம் இருக்காது. ஆட்டோமேட்டிக்காக சார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இந்த ரோபோ நாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்சனை என்னவென்றால், அந்த நாய்க்கு சம்பக் என்று பெயரிட்டது தான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சம்பக் என்பது ஒரு பிரபல குழந்தைகள் பத்திரிக்கையின் பெயராகும்.
இதன் காரணமாக, அந்த நிறுவனம் பிசிசிஐக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ பதில் அளிக்க வேண்டும். இந்த வழக்கு ஜூலை 9ஆம் தேதி விசாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ தனது ரோபோ நாய்க்கு சம்பக் என்று பெயரிட்டதன் மூலம் குழந்தைகள் பத்திரிக்கையின் டிரேடு மார்க்கை மீறியதாக அந்த நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக ரோபோ நாய் மைதானத்தில் வலம் வந்த நிலையில், தற்போது பிசிசிஐ மீது வழக்கு பாய்ந்துள்ளது.
April 30, 2025 7:25 PM IST


