Last Updated:
மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் மிகக் கடுமையாக அட்டாக் செய்கிறார்கள். இந்த அளவு சென்னை அணி தடுமாறியதை நான் பார்த்தது கிடையாது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்ற முடிந்த 8 ஆட்டங்களில் சென்னை அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், தோல்வி குறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் பாதியளவு ஆட்டங்கள் ஐபிஎல் தொடரில் நிறைவு பெற்றுள்ளன. தற்போது வரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் தோல்வி அடைந்து வெறும் 4 புள்ளிகளுடன் கடைசி இடமான பத்தாவது இடத்தில் இருக்கிறது.
சென்னை அணிக்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதம் உள்ளன. இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் கூட மற்ற அணியின் ரிசல்ட்டை பொறுத்து சென்னை அணி பிளே ஆப் செல்லலாம் அல்லது வெளியேறலாம்.
முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு நடப்பு சீசனில் சென்னை அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியுள்ள நிலையில், தோனி அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை ஏற்றுள்ளார். மோசமான பௌலிங், பேட்டிங் என அனைத்து டிபார்ட்மெண்ட்களிலும் சென்னை பலவீனமாக காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான வான்கிடேயில் நடைபெற்ற மேட்ச்சில் சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் போது கமெண்டரி செய்து கொண்டிருந்த சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியதாவது-
”என்னை பொறுத்த அளவில் நடைபெற்று முடிந்த மெகா ஏலம் சென்னை அணிக்கு சரியானதாக அமையவில்லை. ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்கள், திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தார்கள். பஞ்சாப் அணியின் பிரியன்ஷ் ஆர்யா போன்ற இந்த தொடரில் சதம் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று சீனியர் ஆட்டக்காரர்களும் ஏலத்தில் இருந்தார்கள். ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எல். ராகுல் போன்ற சீனியர் வீரர்களை சென்னை அணி ஏலத்தில் தவற விட்டு விட்டது.
நீங்கள் மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் மிகக் கடுமையாக அட்டாக் செய்கிறார்கள். இந்த அளவு சென்னை அணி தடுமாறியதை நான் பார்த்தது கிடையாது” என்று கூறியுள்ளார். 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சென்னை அணிக்காக 12 சீசன்களில் சுரேஷ் ரெய்னா விளையாடி உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
April 21, 2025 5:21 PM IST


