Last Updated:
19 ஆவது ஓவரில் துருவ் ஜுரெல் 47 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தபோது ஆட்டம் ஆர்சிபி பக்கம் சாய்ந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். நிதானமாக விளையாடிய சால்ட் 23 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த கோலி – படிக்கல் இணை அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது.
இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அரைச்சதம் கடந்த விராட் கோலி 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 27 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
டிம் டேவிட் 23 ரன்களும், ஜிதேஷ் சர்மா 20 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 205 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பி ஆர்சிபிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அவருடன் இணைந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 19 பந்துகளில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
நிதிஷ் ராணா 28 ரன்களும், ரியான் பராக் 22 ரன்களும் எடுத்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹெட்மேயர் 11 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த துருவ் ஜுரெல் ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார். 19 ஆவது ஓவரில் துருவ் ஜுரெல் 47 ரன்னிலும், ஜோப்ரா ஆர்ச்சர் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தபோது ஆட்டம் ஆர்சிபி பக்கம் சாய்ந்தது.
கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் 0,1, 1+Run Out, 1, 1 என மொத்தம் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
April 24, 2025 11:36 PM IST


