Last Updated:
பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 58வது லீக் போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் செந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
3 நாட்கள் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் இன்று மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரு நாடுகளுக்கு மத்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. குறிப்பாக கடந்த நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது.
இதன் பின்னர் காலவரையறை இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் அதாவது வரும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் மீதமுள்ள போட்டிகளை சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான 58வது லீக் போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் அந்த போட்டி மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
May 10, 2025 11:30 PM IST


