Last Updated:
இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறுவதுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விடும்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றிருந்த நிலையில், தோல்விக்கு ஆர்சிபி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மும்பை, பெங்களூரு, குஜராத், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 52 ஆவது லீக் போட்டியில் பெங்களூரு அணி சென்னை அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப் பாதைக்கு சென்னை அணி திரும்புமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ள சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து முன்னேறும் விதமாக இன்றைய போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்க உள்ளது. தோனி பங்கேற்கும் கடைசி சீசனாக இந்த சீசன் அமையும் என்று கூறப்படும் நிலையில் தோனி மற்றும் விராட் கோலியின் மோதலை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
சென்னை அணியில் டெவால்ட் ப்ரூவிஸ், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இன்றைய ஆட்டம் ஆர்சிபிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தரவரிசையில் மும்பை, குஜராத், பெங்களூரு அணிகள் தலா 14 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறுவதுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விடும்.


