Last Updated:
வட இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களை மே 7ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்களைக் கவனத்தில் கொண்டு, போட்டி நடைபெறும் இடத்தை ஐபிஎல் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதலை நடத்தி, ஏராளமான தீவிரவாதிகளைக் கொன்று குவித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக வரும் 11ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அனில் படேல் கூறுகையில், ”மே 11ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப்-மும்பை போட்டியை அகமதாபாத் மைதானத்தில் நடத்துகிறோம். இது தொடர்பாக பிசிசிஐ கடைசி நேரத்தில் எங்களிடம் கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று நாங்கள் ஏற்பாடுகளை செய்துள்ளோம். இன்று மாலையில் மும்பை அணி வீரர்கள் அகமதாபாத் வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் முக்கிய விமான நிலையங்களை மே 7ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டியும் தரம்சாலாவில் இருந்து அகமதாபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


