Last Updated:
ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் தனது அபாரமான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியைத் தடுத்தார்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது டி20 போட்டி கான்பெராவில் உள்ள மனுக்கா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க வீரராகக் களம் இறங்கிய ஆஸ்திரேலியாவின் ஜார்ஜியா வோல், இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 88 ரன்கள் குவித்தார். அவருக்குத் துணையாக பெத் மூனி 46 ரன்கள் எடுத்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 164 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா 29 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 31 ரன்களும் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நிலைத்து நின்று 36 ரன்கள் எடுத்த போதிலும், ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் தனது அபாரமான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியைத் தடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. கடைசி போட்டி நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறுகிறது.


