Last Updated:
இண்டிகோ விமான சேவை ரத்து காரணமாக கட்டணங்கள் உயர்ந்துள்ளன. மத்திய அரசு கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டது. ரயில்வே கூடுதல் பெட்டிகள் இணைத்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட அல்லது தடைப்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத்தையு திருப்பி அளிக்க வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து துறையின் விதிகளை அமல்படுத்த போதிய ஊழியர்களை நியமிக்காததால், கடந்த ஒன்றாம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் 109 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக உள்நாடு மற்றும் பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து சென்னைக்கு வரும் 20 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து செல்லும் 28 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், சென்னைக்கான 232 விமான சேவைகள் வழங்கம் போல் வழங்கப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானிகள், விமான பொறியாளர்கள் பற்றாக்குறையால் மேலும் சில விமானங்கள் ரத்தாக வாய்ப்பு உள்ளதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்தானதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற விமான நிறுவனங்களின் கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன. சென்னை கோவை இடையே வழக்கமாக 5 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும் விமானம் கட்டணம், 70 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. சென்னை திருச்சி விமான கட்டணம் 30 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நாளை டெல்லி செல்வதற்கான விமானக்கட்டணமும் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. பெங்களூருக்கான விமான கட்டணம் 20 ஆயிரம் ரூபாயாகவும் கோழிக்கோட்டிற்கான விமானக் கட்டணம் 30 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனிடையே, இண்டிகோ விமான சேவை ரத்து காரணமாக நாடு முழுவதும் 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை ரயில்வே இணைத்துள்ளது.
இதனிடையே புதிதாக பரிந்துரைக்கப்பட்ட கட்டண விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இண்டிகோ விமான சேவை பாதிப்பை பயன்படுத்தி பிற நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. விமானக் கட்டணங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது
இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட அல்லது தடைப்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத்தையும் நாளை இரவு எட்டு மணிக்குள் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவில், பாதிக்கப்பட்ட பயணிகள் வேறு நாளில் பயணிப்பதற்காக கூடுதலாக வசூலிக்கும் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் எனவும் விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயணிகளுக்கு பிரத்யேக உதவி மற்றும் பயணத்தை திரும்ப பெறுவதற்கான மையத்தை இண்டிகோ நிறுவனம் அமைக்க வேண்டுமெனவும், பயணிகளின் உடமைகளை 48 மணிநேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
December 06, 2025 5:35 PM IST


