உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் அதன்பின்னர் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றைய முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியின் ஆடும் 11 வீரர்களில் ஷுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரிங்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றனர்.
ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர் வெஸ்லி மத்வேர் 21 ரன்களும், பிரையன் பென்னட் 23 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சிக்கந்தர் ராசா 17 ரன்களும், டியோன் மையர்ஸ் 23 ரன்களும் எடுக்க, விக்கெட் கீப்பர் க்ளைவ் மடான்டே 21 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி 115 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து ரன்கள் 116 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் நடையக் கட்டினார். ருதுராஜ் கெய்க்வாட் 7 ரன்களும், ரியான் பராக் 2 ரன்களும் எடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரின்கு சிங் ரன் ஏதும் எடுக்காமலும், துருவ் ஜுரெல் 7 ரன்னிலும் வெளியேற அதிரடியாக ரன்கள் சேர்த்த ஆவேஷ் கான் 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி ஆட்டமிழந்தார்.
கடைசி 3 ஓவர்கள்…
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார். 9 விக்கெட் இழந்திருந்த நிலையில், எதிர்முனையில் கலீல் அகமது நிற்க, லூக் ஜாங்வி வீசிய 18 ஆவது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரியை வாஷிங்டன் சுந்தர் விளாசினார். இதனால், அணி வெற்றியை நெருங்கி வெற்றிக்கு 12 பந்துகளில் 18 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
19 ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட, கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. 2 ஆவது பந்தில் 2 ரன்களும், 3 , 4 ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படாத நிலையில், 5 ஆவது பந்தில் 27 ரன்கள் எடுத்திருந்த வாஷிங்டன் சுந்தர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
.
&w=750&resize=750,375&ssl=1)
