Last Updated:
சாய் சுதர்சன் – ஜெய்ஸ்வால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 243 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
டெல்லியில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை நிதானமான தொடக்கத்தை கொடுத்தது. ராகுல் 54 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சாய் சுதர்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 243 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சாய் சுதர்சன் 165 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை கடந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 253 பந்துகளில் 173 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 68 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
October 10, 2025 4:56 PM IST