இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, அடுத்த மாதம் 2 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், துபாயில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர்( Ajit Agarkar ) இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்டார்.
கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், துருவ் ஜுரேல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தேவ்தத் படிக்கல், நிதிஷ்குமார் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் ரவிந்திர ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷர்பராஸ் கான் (Sarfaraz Khan) மற்றும் மனவ் சுதார் (Manav Suthar) ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக, துருவ் ஜூரெல் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரிஷப் பந்த் வகித்து வந்த துணை கேப்டன் பொறுப்பு ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முதுகு அறுவை சிகிச்சையிலிருந்து மீள 6 மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொள்வதாக ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் தெரிவித்த நிலையில், டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி- ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஜெகதீசன்
September 25, 2025 9:45 PM IST

