Last Updated:
நாளை இந்திய அணி 6 விக்கெட்டுகளை விரைந்து கைப்பற்றினால் வெஸ்ட் இண்டீஸ் ஃபாலோ ஆன் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்கேற்கும் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தனர். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து இன்று 2 ஆவது நாள் ஆட்டம் தொடங்கிய போது இந்திய அணி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்தது. 175 ரன்கள் அவர் எடுத்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின்னர் நிதிஷ் குமார் – கேப்டன் சுப்மன் கில் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
54 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது நிதிஷ் குமார் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கில் சதம் அடித்து அசத்தினார். 196 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்சர் 16 பவுண்டரியுடன் 129 ரன்கள் குவித்தார்.
துருவ் ஜுரெல் 44 ரன்களில் ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன்கள் இருந்தது. அப்போது ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக கேப்டன் அறிவித்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரர் ஜான் கேம்பல் 10 ரன்கள் எடுத்திருந்போது ரவிந்திர ஜடேஜா வீசிய பந்தில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சந்திரபால் 34 ரன்களில் ஆட்டமிந்தார். ஓரளவு நிதானமாக விளையாடிய ஆலிக் அதானாசே 41 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். கேப்டன் ராஸ்டன் சேஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
ஷாய் ஹோப் 31ரன்களுடனும், டெவின் இம்லாக் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நாளை இந்திய அணி 6 விக்கெட்டுகளை விரைந்து கைப்பற்றினால் வெஸ்ட் இண்டீஸ் ஃபாலோ ஆன் ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த வகையில் டெல்லி டெஸ்டில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
October 11, 2025 5:25 PM IST