Last Updated:
பனிமூட்டால் லக்னோவில் இந்தியா-தென்னாப்பிரிக்கா டி20 ரத்து, பிசிசிஐ டிசம்பர்-ஜனவரி வட இந்திய போட்டிகள் தவிர்ப்பது குறித்து முக்கிய முடிவு எடுத்தது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4 ஆவது டி20 போட்டி பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில் ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கும்பட்சத்தில் 4 ஆவது டி20 லக்னோவில் நடைபெற இருந்தது. ஆனால் அதிக அளவிலான பனிமூட்டம் காரணமாக டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான 4ஆவது இருபது ஓவர் போட்டி ரத்தான நிலையில் கால அட்டவணை தேர்வு செய்வதில் பிசிசிஐ முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரையிலான காலகட்டங்களில் எவ்வித போட்டிகளையும் வட இந்திய மாநிலங்களில் நடத்த வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதிலாக தென்னிந்திய பகுதிகள் அல்லது மேற்கு பகுதிகளில் போட்டிகளை நடத்தலாம் என யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லக்னோ 20 போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து மாநிலங்களவையில் பேசிய பிசிசிஐ துணை தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராஜீவ் சுக்லா, குளிர்காலத்தில் வட இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடுவதில் அதிக கவனம் தேவை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய மற்றொரு காங்கிரஸ் எம்.பி,, சசி தரூர், ஜனவரி மாத கிரிக்கெட் போட்டிகளை கேரளாவுக்கு மாற்றலாம் என்றும், அங்குள்ள தட்பவெப்பநிலை, போட்டிகள் நடத்த சாதகமாக இருப்பதாகவும் பரிந்துரைத்தார்.
அதேநேரம், ஒரு மாநிலத்திற்கு மட்டும் அதிக வாய்ப்புகளை தர முடியாது என்று ராஜீவ் சுக்லா கூறினார். ஆனாலும், தனது கருத்தை மீண்டும் சசி தரூர் வலியுறுத்திய நிலையில், அனைத்து போட்டிகளையும் கேரளாவிற்கே மாற்றிடலாம் என ராஜீவ் சுக்லா கிண்டலாக பதிலளித்தார். இதுகுறித்த விவாதத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இருவரும் ஈடுபட்டனர்.
இதனிடையே இந்தியா மற்றும் தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றால் தொடர் சமமாகும் நிலையில, இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பறிக்க அந்த அணி முயலும். இந்தியா, கடைசி போட்டியை வென்று நடப்பாண்டை வெற்றியுடன் முடிக்குமா என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
Dec 19, 2025 11:00 AM IST


