கடைசி ஓவர் வரை திரில்லாக நடந்த ராஞ்சி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்த இந்திய அணி, 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முதல் ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடியது. முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லிற்கு காயம் ஏற்பட்டதால், ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் செயல்பட்டார். டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா அணி பௌலிங் தேர்வு செய்ய, முதலில் பேட் செய்தது இந்தியா.
தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெயஸ்வாலும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ருத்ராஜ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். வாஷிங்டன் சுந்தர் 13 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் இழந்தாலும் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை ஒவ்வொரு ஓவர்களிலும் வெளிப்படுத்தினார்.
இதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டியில் இது விராட் கோலி அடிக்கும் 52-வது சதம் என்பது கவனிக்கத்தக்கது. ஒட்டுமொத்த அளவில் விராட் கோலி 83-வது சதத்தினை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார். 102 பந்துகளை எதிர் கொண்ட போது விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 52 ஆவது சதத்தை பதிவு செய்தார்.
பெரிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 4.5 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறிய அந்த அணிக்கு மேத்யூ ப்ரீட்ஸ்கே ஆறுதல் அளித்தார். அவர் 72 ரன்கள் குவிக்க ஜேன்சன் 70 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட் விழ, கடைசி நேரத்தில் கார்பின் போஷ் அதிரடி காட்டினார். இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற நிலை உருவானது. கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் அனைத்து விக்கெட்களையும் தென் ஆப்ரிக்கா அணி இழக்க, இந்திய அணி வெற்றிபெற்றது.
இதற்கிடையே, ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ஹிட் மேன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில், விளையாடிய ரோஹித் சர்மா புதிய சாதனையை படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஷாகித் அப்ரிடி 351 சிக்சர்கள் விளாசி முதலிடத்தில் இருந்த நிலையில், ரோஹித் அதனை முறியடித்தார். 277 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித், தற்போது 352 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் 331 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 30, 2025 9:57 PM IST

