Last Updated:
IND vs SA | கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி ராஞ்சிக்கு வந்துவிட்டு ‘ராஞ்சியின் முகம்’ முன்னாள் கேப்டன் தோனி வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியுமா என்ன?
ராஞ்சி வந்துள்ள இந்திய வீரர்கள் முன்னாள் கேப்டன் தோனியை அவரின் இல்லம் தேடிச் சென்று சந்தித்துள்ளனர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் ராஞ்சிக்கு வந்துள்ளனர். கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி ராஞ்சிக்கு வந்துவிட்டு ‘ராஞ்சியின் முகம்’ முன்னாள் கேப்டன் தோனி வீட்டிற்குச் செல்லாமல் இருக்க முடியுமா என்ன?
ஆம், இந்திய அணி வீரர்களுக்கு தோனி நேற்றிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஹோட்டலில் இருந்து தோனியின் வீடு வரை வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் தோனியின் வீட்டிற்குச் செல்லும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதேபோன்று மற்ற இந்திய வீரர்களும் தோனி அளித்த விருந்தில் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தோனி தானே காரை ஒட்டிச் சென்று விராட் கோலியை அணி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்த சந்திப்பிற்கு “இந்த ஆண்டின் மிகச்சிறந்த ரீ-யூனியன்” என்று பெயரிட்டது. இந்த வீடியோ தற்போது வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ராஞ்சிக்குச் சென்ற இந்திய வீரர்கள் இதற்கு முன்பு தோனியின் வீட்டில் இரவு விருந்துகளில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கடைசியாக கடந்த ஆண்டு ராஞ்சியில் ஒரு சர்வதேச போட்டியில் விளையாடியது. பிப்ரவரி 2024-ல், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. ஆனால் அந்த தொடரில் தனது இரண்டாவது குழந்தையான அகாய் பிறந்ததால் கோலி அதில் இடம்பெறவில்லை.
தென்னாப்பிரிக்கா எதிரான தொடரில் இந்தியாவுக்காக விளையாட தயாராகியுள்ள கோலி, கடைசியாக அக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து ஃபார்மை நிரூபித்தார். இதனால், இந்த தொடரிலும் அவரின் ஃபார்ம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
November 28, 2025 7:51 AM IST


