Last Updated:
இந்திய அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
டெஸ்ட் சாம்பியன் அணியான தென்னாப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் தொடர்ந்த இந்திய அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது.
இந்திய அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு முன்னால் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 35 ஓவர்கள் முடிந்த நிலையில் 93 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அத்துடன் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். தற்போது தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை விட 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி விட்டால் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும்.
November 15, 2025 9:17 PM IST


