Last Updated:
T20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் இன்று; இந்தியா முன்னிலை, பாகிஸ்தான் வீரர்கள் அழுத்தத்தில், சூர்யகுமார் யாதவ் மற்றும் பாபர் அசாம் முக்கியம்.
நீண்ட இழுபறி மற்றும் சர்ச்சைகளுக்கு பின்னர், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் இன்று நடைபெற உள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என முதல் முரண்டு பிடித்த பாகிஸ்தான் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் விளையாட ஒப்புக்கொண்டது.. இதனால் கொழும்புவில் நடைபெறும் இப்போட்டி கூடுதல் கவனத்தையும் பெற்றுள்ளது. T20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் 7 போட்டிகளில் இந்தியாவும் ஒரே போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை போட்டியிலும், இந்தியாவுக்கே அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 தரவரிசையில் முன்னிலையில் இருப்பதோடு, மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் அடிக்கும் திறன் கொண்டவர்.
திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விக்கெட்டுகள் சரிந்தால் ஆட்டத்தை மீட்கும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடமே உள்ளது அதேநேரத்தில் நமிபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாத அபிஷேக் சர்மா, இந்த போட்டியிலும் விளையாடவில்லை என்றால், அணிக்கு பின்னடைவு ஏற்படும்.
பும்ராவைத் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அவ்வப்போது சவால்களை எதிர்கொள்கின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய பலமே குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி தான். கொழும்புவின் மெதுவான ஆடுகளத்தில் இவர்களின் ‘மிஸ்டரி’ சுழலை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்கு கடினம்.
ஷாஹீன் ஷா அப்ரிடி மற்றும் நசீம் ஷா கூட்டணி புதிய பந்தில் விக்கெட் எடுப்பதில் வல்லவர்கள். இந்தியாவின் டாப்-ஆர்டரை ஆரம்பத்திலேயே வீழ்த்துவது இவர்களின் திட்டமாக இருக்கும். கேப்டனாக இல்லாவிட்டாலும் , பாபர் அசாம் நங்கூரம் போல் நின்று ரன் சேர்க்கக்கூடியவர். இந்தியாவிற்கு எதிராக அவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது பாகிஸ்தான் அணிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
சதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்கள். ஆனால் இந்திய ஸ்பின்னர்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்கக் தடுமாறுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது ஏற்படும் மனரீதியான அழுத்தம் பல நேரங்களில் பாகிஸ்தான் வீரர்களை தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டி விடுகிறது. எது எப்படி இருந்தாலும், இந்தியா- பாகிஸ்தான் போட்டி எப்போதும் கண்களுக்கும் மனதிற்கும் விருந்து படைக்கும் ஒன்று தான்.


