Last Updated:
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறுவார்கள் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ தீவிரமாகத் தயாராகி வருகிறது.
வரும் ஜனவரி 3, 2026 சனிக்கிழமை அன்று தேர்வுக் குழுவினர் கூடி வீரர்களின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடரில் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் வருகை என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
நீண்ட கால காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த ஷமி, தற்போது முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போட்டிகளில் அவர் சிறப்பாகப் பந்துவீசி தனது பார்மை நிரூபித்துள்ளதால், இந்தத் தொடரில் அவர் மீண்டும் அணியில் இடம்பிடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், சீனியர் வீரர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. குறிப்பாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்குப் பதிலாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் கூட்டணி வேகப்பந்து வீச்சை வழிநடத்தும். தென்னாப்பிரிக்கத் தொடரில் காயம் காரணமாக விளையாடாத சுப்மன் கில், மீண்டும் அணிக்குத் திரும்பி கேப்டன் பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த ஒருநாள் தொடரில் இடம்பெறுவார்கள் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த ஒருநாள் தொடர் ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ம் தேதி ராஜ்கோட்டிலும், ஜனவரி 18-ம் தேதி இந்தூரிலும் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ளன.


