Last Updated:
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று தனது முதல் டி20 போட்டியில் விளையாடி வருகிறது. அயர்லாந்தின் பெல்ஃபஸ்ட் நகரில் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து அணி தொடக்கத்தில் கடுமையாக தடுமாறியது. இதனால் 12 முதல் 15 ஓவர்களுக்குள்ளாக அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த அணியின் கேப்டன் லோர்கன் டக்கர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கேரத் டெலானி 49 ரன்கள் சேர்த்தார்.
மற்ற பேட்ஸ்மேன்களில் டிம் டெக்டர் 17 ரன்களும், பெஞ்சமின் கேலட்ஸ் 15 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து அணி 182 ரன்கள் குவித்தது.
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு ப்ளேயிங் 11இல் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


