இந்தியாவுக்கு எதிரான 5ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் சுழல் மேஜிக்கில் சிக்கிய இங்கிலாந்து அணி 218 ஓட்டங்களுக்க ஆட்டமிழந்துள்ளது.
தரம்சாலாவில் நடைபெற்று வரும் 5ஆவது டெஸ்ட்டில் நாணயச்சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி சுமாரான துவக்கம் கொடுத்தனர். பாஸ்பால் ஆட்டத்தை மறந்து பொறுமையை கடைபிடித்த இவர்கள் கூட்டணி 18ஆவது ஓவர் வரை நீடித்து 64 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு அதிரடி குறித்து பாடமெடுத்து சர்ச்சையில் சிக்கிய பென் டக்கெட் விக்கெட்டை முதல் விக்கெட்டாக வீழ்த்தினார் குல்தீப் யாதவ்.
பென் டக்கெட் 58 பந்துகளில் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். அதே குல்தீப் ஆலி போப்பை நிலைக்கவிடவில்லை. அவரை 11 ஓட்டங்களில் விக்கெட்டாக்கிய குல்தீப், மூன்றாவது விக்கெட்டாக நிதானத்துடன் ஆடி அரைசதம் கடந்திருந்த ஜாக் கிராவ்லியை 79 ஓட்டங்களில் வீழ்த்தினார்.
தனது 100ஆவது டெஸ்ட் போட்டியை அதிரடியுடன் தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்வை அதே அதிரடியில் வீழ்த்தி இந்த இன்னிங்ஸின் முதல் நான்கு விக்கெட்களையும் தன் வசமாக்கினார் குல்தீப் யாதவ். அதுவரை இந்தியாவின் மற்ற பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தவில்லை.
இங்கிலாந்து அணி 175 ஓட்டங்கள் எடுத்திருந்த சமயத்தில் ஜோ ரூட் நிலைத்து ஆட முயன்றார். ஆனால், அவரை எல்பிடபிள்யு மூலம் அவுட் ஆக்கினார் ஜடேஜா. இதற்கு அடுத்த ஓவரிலேயே இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை பூஜ்யத்தில் நடையைக்கட்ட வைத்தார் குல்தீப். இது குல்தீப்பின் ஐந்தாவது விக்கெட். அதேநேரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ்வின் 50ஆவது விக்கெட் என்ற மைல்கல்லாகவும் அமைந்தது.
இதன்பின் அஸ்வின் தனது மாயாஜாலத்தை காண்பிக்க ஆரம்பித்தார். தனது 100ஆவது டெஸ்ட்டில் பந்துவீசிய அஸ்வினுக்கு முதல் இரண்டு செஷன்கள் சிறப்பாக அமையவில்லை. எனினும், மூன்றாவது செஷனில் இங்கிலாந்தின் டெயிலெண்டர்களை கலங்கடித்தார். டாம் ஹார்ட்லி, பென் ஃபோக்ஸ், ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து 100ஆவது டெஸ்ட்டில் 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.
இதன்மூலம் முதல் இன்னிங்சில் 57.4 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 218 ஓட்டங்கள் எடுத்தது.
தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
The post IND vs ENG 5th Test: 218 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து appeared first on Thinakaran.