Last Updated:
கூடுதல் ஆல்ரவுண்டர்களுடன் இந்திய அணி 2 ஆவது டெஸ்டை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற்ற நிலையில், இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. போட்டியில் முதல் 4 நாட்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-ஆவது நாளில் பீல்டிங்கில் கோட்டை விட்டதால் தோல்வியடைய நேரிட்டது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் இன்று தொடங்குகிறது.
இந்த மைதானத்தில் எந்த ஒரு ஆசிய அணியும் இதுவரை வெற்றி பெற்றது கிடையாது. எனவே, இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அது வரலாற்று சாதனையாக அமையும். இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால், இந்திய அணி கூடுதல் ஸ்பின்னருடன் களமிறங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பும்ராவுக்கு பதிலாக இன்றைய ஆட்டத்தில் ஆகாஷ் தீபும், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.
சாய் சுதர்சன் அல்லது கருண் நாயருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்த மூன்று மாற்றங்கள் மூலம் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங் பலம் கூடும். இந்த புதிய வியூகத்துடன் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் மூன்று பேர் பேட்ஸ்மேன்களாகவும் இருப்பதால், இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூடுதல் பலத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
July 02, 2025 12:54 PM IST