Last Updated:
ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகிய நிலையில், தமிழக வீரர் ஜெகதீசன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 5 ஆவது டெஸ்ட் போட்டியில் பந்துக்கு பதிலாக ஜெகதீசன் விளையாடுவார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்துக்கு மாற்றாக தமிழக வீரர் ஜெகதீசன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கும் நிலையில், மான்செஸ்டரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய 4 ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த போட்டியில் கிறிஸ்வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தில் ரிஷப் பந்த் காயமடைந்தார். காலில் ஏற்பட்ட எலும்பு முறிவால் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார். மேலும், ரிஷப் பந்த் ஆறு வாரங்கள் வரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ரிஷப் பந்துக்கு பதிலாக கோயம்புத்தூரை சேர்ந்த விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 358 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் சதத்தால் 669 ரன்கள் குவித்தது.
311 ரன்கள் பிந்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நாளில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கிய இந்திய வீரர்கள் விக்கெட் இழக்காமல் நிதானமாக விளையாடி டிராவை நோக்கி அழைத்துச்சென்றனர். ராகுல் 90 கில் சதம் விளாசி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
கடைசியாக ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து 200 ரன்களை கடந்ததுடன் அடுத்தடுத்து சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இங்கிலாந்து வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் அடுத்த போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கவுள்ளது. இந்த போட்டி 31ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.
July 28, 2025 8:18 AM IST