Last Updated:
5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
இந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 465 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 6 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடியது.
இந்திய அணியில் தொடக்க வீரர் கே. எல். ராகுல் 137 ரன்களும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 118 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 96 ஓவர்கள் வரை விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் மொத்தம் இங்கிலாந்து அணியை விடவும் இந்தியா 370 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
நேற்றைய 4-ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி நிதானமாக ரன்களை சேர்த்தது.
மதிய உணவு இடைவேளை வரையில் இங்கிலாந்து அணி 30 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் ஒருநாள் போட்டியை போல் ரன்களை குவித்தார்.
ஜாக் கிராவ்லி 65 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஆலி போப் 8 ரன்களும், ஹேரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர். 170 பந்துகளை எதிர்கொண்ட டக்கெட் 149 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஜோ ரூட் 53 ரன்களும், ஜேமி ஸ்மித் 44 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து அணி 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் முலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
June 24, 2025 11:19 PM IST


