Last Updated:
பர்மிங்காமில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா மீண்டும் அணியில் சேர, கருண் நாயர், நிதிஷ் குமார் நீக்கப்பட வாய்ப்பு.
பர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று சரித்திரம் படைத்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாத இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற்று அனைவரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது. வெற்றி பெற்ற கையோடு லார்ட்ஸ் டெஸ்டிலும் வெற்றி பெற இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே ஜூலை 10 முதல் 14 ஆம் தேதி வரை 3வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
லார்ட்ஸ் டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என கேப்டன் சுப்மன் கில் ஏற்கனவே தெரிவித்துள்ளார். பிரசித் கிருஷ்ணாவின் வேகம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் அவருக்கு எதிராக பல ட்ரோல்கள் வலம் வந்தன. லார்ட்ஸ் மைதானத்தில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு பும்ரா அணியில் மீண்டும் இணைகிறார்.
பிரசித் கிருஷ்ணாவை போன்றே சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாமல் இருக்கும் கருண் நாயர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. நிதிஷ் குமாரை பர்மிங்காமின் 2 ஆவது இன்னிங்சில் பவுலராக சுப்மன் கில் பயன்படுத்தவில்லை. 2 இன்னிங்சிலும் நிதிஷ் ஒரு ரன்னில் அவுட்டானர். அதனால் பேட்டிங்கிலும் அவர் சோபிக்கவில்லை.
கருண் நாயருக்கு 2 டெஸ்டில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. முதல் டெஸ்டில் பின்வரிசயைில் இறங்கிய கருண் நாயர் 2 ஆவது டெஸ்டில் 3 ஆவது இடத்தில் களமிறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்டில் 0 மற்றும் 20 ரன்களிலும் 2 ஆவது டெஸ்டில் 31 மற்றும் 26 ரன்களில் அவுட்டானார். இதனால் கருண் நாயாருக்கு பதிலாக தமிழக வீரர் சுதர்சனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம். நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது அர்ஷதீப் சிங் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஆல்ரவுண்டர்களாக அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர்.
லார்ட்ஸ் டெஸ்டில் விளையாடும் இந்திய உத்தேச அணி : யாஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்/அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்புரித் பும்ரா
July 07, 2025 1:17 PM IST


