Last Updated:
பவுலரான ஆகாஷ் தீப் அரைச்சதம் அடித்திருப்பது இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பவுலர் ஆகாஷ் தீப் அரைச்சதம் அடித்துள்ளார். டெஸ்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் நிதானமாக ரன்களை சேர்த்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதால் ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ளன. அவற்றில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இந்நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது. இந்த போட்டியின் போது சாய் சுதர்சன் ஆட்டம் இழந்த பின்னர் பவுலர் ஆகாஷ் தீப் களம் இறக்கப்பட்டார். நைட் வாட்ச்மேனாக அவர் நேற்று மொத்தமே 2 பந்துகள் மட்டுமே எதிர்கொண்டார்.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 9 பவுண்டரிகள் அடித்த ஆகாஷ் தீப் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இது அவருடைய டெஸ்ட் போட்டிகளின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்துள்ளது. மறுமுனையில் யசஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
பவுலரான ஆகாஷ் தீப் அரைச்சதம் அடித்திருப்பது இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இதனால் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இருநாட்டு ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்து வருகிறது.
August 02, 2025 5:19 PM IST


