Last Updated:
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவதை தவிர்த்து உள்ளது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாய் மைதானத்தில் நடைபெறும்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் தற்போது பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி கராச்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவதை தவிர்த்து உள்ளது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாய் மைதானத்தில் நடைபெறும். இந்தநிலையில் நாளை போட்டி நடைபெறும் மைதானத்தையொட்டி உள்ள பகுதியில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
55 சதவீத வாய்ப்புகள் மழை பெய்வதற்கு இருப்பதாக வானிலை தகவல்கள் கூறுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2:30 மணிக்கு தொடங்க உள்ளது. இது குரூப் போட்டி என்பதால் இந்த போட்டிக்கு ரிசர்வ் நாள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி கிடைக்கும். அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு மட்டும் ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி –
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா.
February 19, 2025 4:01 PM IST


