Last Updated:
விராட் கோலி மீண்டும் டக் அவுட் அதிர்ச்சி, ரோஹித் சர்மா அரைசதம் மகிழ்ச்சி; இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது போட்டி அடிலெய்டு ஓவலில் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி மீண்டும் டக் அவுட்டாகி அதிர்ச்சியும், ரோஹித் சர்மா அரைசதம் அடித்துள்ளது மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பெர்த்தில் மழை குறுக்கிட்ட போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சோபிக்கவில்லை.
இந்த நிலையில், 2வது போட்டி இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தீவிரம் காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.
இந்நிலையில் ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன் கில் 9 ரன்களில் அவுட்டாகி வெளியேறியதும் விராட் கோலி களத்திற்கு வந்தார்.
பெர்த்தில் ஏமாற்றம் கொடுத்த விராட் கோலி அடிலெய்டில் அபாரமாக விளையாடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. 4 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி சேவியர் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யு முறையில் டக்அவுட்டானார். விராட் கோலி டக்அவுட்டாகி பெவிலியன் திரும்பும் போது இந்திய ரசிகர்கள் அவருக்கு கைதட்டலை பரிசாகவே தந்தனர். அதனை விராட் கோலி கையசைத்து ஏற்றுக்கொண்டார்.
விராட் கோலி ஏமாற்றம் கொடுத்த போதும் முன்னாள் கேப்டன் ரோஹித் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். தனது ஸ்டைலில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட ரோஹித் 77 பந்துகளுக்கு 53 ரன்கள் உடன் விளையாடி வருகிறார். ரோஹித் இதே ஃபார்மில் விளையாடி வந்தால் சதம் அடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
October 23, 2025 10:59 AM IST


