Last Updated:
நீண்ட இடைவேளைக்கு பிறகு சீனியர் ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.
ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு இன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. முதல் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீபாவளியை ஆஸ்திரேலியாவில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி உள்ளூரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் 3 ஆம் இடத்திற்கு சென்றுள்ளது.
இந்நிலையில் அடுத்த போட்டியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
ஒருநாள் போட்டிகள் வரும் ஞாயிறு அன்று தொடங்குகின்றன. அதன்பின்னர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சீனியர் ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.
ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில் கேப்டன்ஷிப் சுப்மன் கில்லுக்கு மாற்றப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த மாற்றம் நடந்துள்ளதாக அணி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.
October 15, 2025 9:04 PM IST