சோஷியல் மீடியாவில் பார்வேர்ட் செய்யப்படும் தகவல்கள் முதல் பல்வேறு ஆலோசனைகள் வரை வருமான வரி தாக்கல் செய்வது சம்பந்தமாக எக்கச்சக்கமான கட்டுக் கதைகள் நிலவி வருகிறது. எனவே இந்த பதிவில் வருமான வரி சம்பந்தப்பட்ட கட்டுக்கதைகளையும், அதற்கு பின்னணியில் உள்ள உண்மைகளையும் பற்றி பார்க்கலாம்.
கட்டுக்கதை:
என்னுடைய நிறுவனம் TDS தொகையை பிடித்தால், நான் ITR தாக்கல் செய்ய தேவை இல்லை.
உண்மை:
மாத வருமானம் பெறும் பல நபர்கள் தங்களுடைய நிறுவனம் TDS தொகையை பிடித்தம் செய்து விட்டதால், வரி சம்பந்தமான பொறுப்புகளை அவர்களே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. TDS என்பது முன்கூட்டியே வசூல் செய்யப்படும் ஒரு வரி. எனவே வருமான வரி தாக்கல் செய்வது உங்களுடைய பொறுப்பு. சில நேரங்களில் உங்களுடைய வருமானம் வரம்புக்கு உட்பட்டு இருந்தால் உங்களுக்கு ரீஃபண்ட் தொகை கிடைப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது.
கட்டுக்கதை:
பணக்காரர்கள் மட்டுமே வருமான வரி செலுத்த வேண்டும்.
உண்மை:
இது அதிக நபர்களால் நம்பப்பட்டு வரும் ஒரு கட்டுக்கதை. ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பை விட அதிகமாக ஆண்டு வருமானம் பெறும் எவருமே வருமான வரி செலுத்த வேண்டும் என்பது விதி. நீங்கள் ஃப்ரீலான்சராக இருக்கலாம், சிறிய தொழில் செய்யும் முதலாளியாக இருக்கலாம் அல்லது முதலீடுகள் மூலமாக சம்பாதிக்கும் ஒரு நபராக கூட இருக்கலாம். குறிப்பிட்ட உச்சவரம்பை விட உங்களுடைய வருமானம் அதிகமாக இருந்தால் கட்டாயமாக நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
கட்டுக்கதை:
டெட்லைனை தவற விட்டு விட்டால் என்னால் ITR தாக்கல் செய்ய முடியாது.
உண்மை:
கொடுக்கப்பட்ட டியூ தேதிக்குள் ITR தாக்கல் செய்ய வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதே மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி வரை முந்தைய நிதி ஆண்டிற்கான வருமான வரியை நீங்கள் தாக்கல் செய்யலாம். ஆனால் இதற்காக நீங்கள் அபராதங்கள் மற்றும் வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
கட்டுக்கதை:
குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து பெரும் பரிசுகளுக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.
உண்மை:
எல்லாவிதமான பரிசு பொருட்களுக்கும் வருமான வரி செலுத்த தேவையில்லை. வருமான வரி சட்டம், 1961 இல் உள்ள பிரிவு 56 -இன் கீழ் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையிடமிருந்து கிடைக்கும் பரிசு பொருட்களுக்கு, அந்த தொகையை பொருட்படுத்தாமல், முழுவதுமாக நீங்கள் எந்த ஒரு வரியையும் செலுத்த தேவையில்லை. மேலும் ஒரு நிதி ஆண்டில் 50,000 ரூபாய் வரை உறவினர்கள் அல்லாத நபர்களிடமிருந்து பெறும் பரிசு பொருட்களுக்கும் வரி கிடையாது.
கட்டுக்கதை:
வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வது என்பது விருப்பத்திற்குரியது.
உண்மை:
வரிக்கு உட்பட்ட உங்களுடைய வருமானத்தை குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் வருமான வரி சட்டம் சட்டத்தில் உள்ள பிரிவு 80C-ல் முதலீடுகள் செய்வது அவசியம். இது கட்டாயமானது கிடையாது என்றாலும் கூட, இந்த டிடக்ஷன்களை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் தேவைக்கு அதிகமாக வரி செலுத்த வேண்டி இருக்கலாம். எனவே முன்கூட்டியே திட்டமிட்டு புத்திசாலித்தனமாக பிரிவு 80Cன் கீழ் மட்டுமே 1.5 லட்சம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும்.
வருமான வரி சம்பந்தப்பட்ட உண்மைகளை தெரிந்து கொள்வது அந்த செயல்முறையை சௌகரியமானதாக மாற்றும். பிறர் சொல்வதை கேட்பதற்கு பதிலாக நீங்கள் வருமான வரி துறையின் வெப்சைட் அல்லது நம்பகமான டாக்ஸ் எக்ஸ்பர்ட்டை ஆலோசித்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
June 20, 2025 5:19 PM IST
Income Tax: வருமான வரி பற்றி உங்களுக்கு இந்த சந்தேகங்கள் இருக்கா..? அப்ப அவசியம் இதை தெரிஞ்சிக்கோங்க!

