சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும் அதன் சட்ட வரைவை சட்ட மூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஹர்ஷ டி சில்வா எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது முழு நாட்டுக்கும் முக்கியமான விடயம்.இதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் நான்,முதலில் பேச்சு வார்த்தையை நடத்தியதும் அனைத்து கட்சித் தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்காக அழைப்பேன்.
அப்போது மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் அதனை எதிர்க்கட்சிகள் முன்வைக்க முடியும். நாம் அந்த கருத்துக்களை பெற்றுக் கொண்டு அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும் அதன் சட்ட வரைவை சட்ட மூலமாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியும் என்றும் தெரிவித்தார். ஹர்ச டி சில்வா எம்பி தமது கேள்வியின் போது,
சர்வதேச கடன் மறுசீரமைப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. அதேவேளை, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அந்த வகையில் அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் அந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதற்கு கடமைப்பட்டுள்ளது.
இதற்கமைய பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவது சிறந்தது என குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, நான் ஜனாதிபதி பதவியில் எவ்வளவு காலம் இருப்பேன் என்பதும் அத்துடன் நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவராக நீங்கள் எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்பதும் தெரியாது. எவ்வாறெனினும், இது முழு நாட்டுக்கும் முக்கியமான விடயம் என்பதால் நாம் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
The post IMF உடனான பேச்சுவார்த்தைகள்:இறுதி வரைபு சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் appeared first on Thinakaran.