Last Updated:
விமானப் பணிப்பெண் ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தபோது மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயதான விமானப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி, நீச்சல் குளத்தில் நீந்தியதால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த விமானப் பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, உடல்நலம் சரியான பிறகு அவர் ஏப்ரல் 9ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது, தனது கணவரிடம், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வென்டிலேட்டரில் இருந்தபோது, ஏப்ரல் 6 ஆம் தேதி சில மருத்துவமனை ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதியினர் காவல்துறையை அணுகி புகார் அளித்தனர்.
அந்த புகாரில், தான் ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தபோது, அடையாளம் தெரியாத மருத்துவமனை ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் நடைபெறும்போது இரண்டு செவிலியர்களும் அவர்களுடன் இருந்ததாகவும், அவர்களும் அதைத் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த புகாரையடுத்து, சதார் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையாக (FIR) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிக்க: மறுவாழ்வு மையத்தில் நோயாளி கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ – வழக்கு பதிவு செய்த காவல்துறை
மேலும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம், நீதிபதி முன் பதிவு செய்யப்பட்டதாக குருகிராம் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், ICU-வில் வென்டிலேட்டரில் இருந்தபோது, தான் பலவீனமாக இருந்ததால், அந்த ஆணின் நடவடிக்கைகளை எதிர்க்க முடியாத நிலைமையில் இருந்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் உறுதியளித்துள்ளார்.
April 16, 2025 11:17 AM IST


