Last Updated:
Goli Soda: கோலி பாப் சோடாவை தனித்துவமாக்குவது அதன் புதுமையான பேக்கேஜிங் ஆகும்.
வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு கோலி சோடாவை இந்தியா தொடர்ந்து அனுப்பி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் வலுவான இருப்பை உறுதி செய்த கோலி சோடாவின் தேவை உலக அரங்கில் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. ஃபேர் எக்ஸ்போர்ட்ஸ் உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மையின் கீழ், வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான லுலு ஹைப்பர் மார்க்கெட்டுக்கு, கோலி சோடாவின் நிலையான விநியோகங்களை வழங்குவதாக, இந்தியா உறுதி செய்துள்ளது என்று வர்த்தக அமைச்சகத்தின் பிரிவான வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஒரு காலத்தில் அனைத்து வீடுகளிலும் முக்கிய அங்கம் வகித்த புகழ்பெற்ற பானமாக இருந்த கோலி சோடா, தற்போது அதன் புதுமையான மறுபெரியரிடல் மற்றும் மூலோபாய சர்வதேச விரிவாக்கத்தால் உலக அரங்கில் தடம் பதித்துள்ளது. அதாவது, உலகளாவிய சந்தைகளில் வலுவான இருப்பை உறுதி செய்த கோலி சோடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சோதனை முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அதற்கு வெற்றி கிடைத்ததால் இந்தியா தொடர்ந்து கோலி சோடாவை ஏற்றுமதி செய்து வருகிறது.
Also Read: இது என்ன புதுசா இருக்கு?.. வெப்பத்திலிருந்து பயிர்களை காக்க விவசாயிகள் புது டெக்னிக்!
இதையடுத்து, கோலி சோடாவுக்கான தேவையும் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்திருக்கிறது என்பது கவனிக்க வேண்டியது. உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி பான நிறுவனங்களால், கிட்டத்தட்ட காணாமல் போயிருந்த கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் தற்போது வரவேற்பு கிடைத்திருப்பது, உலகளாவிய சந்தைகளில் இந்தியாவின் சிறப்பு வாய்ந்த உள்நாட்டு உணவு மற்றும் பானங்களின் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், ஏற்றுமதி செய்யவும் இந்தியாவின் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை உருவாக்கி இருக்கிறது என்கிறார்கள்.
கோலி பாப் சோடாவை தனித்துவமாக்குவது அதன் புதுமையான பேக்கேஜிங் ஆகும். மேலும் இது இந்திய மக்கள் பயன்படுத்தும் அதே பாணியிலேயே பாட்டிலின் தலையில் ஒரு கோலிகுண்டை கொண்டுள்ளது. மக்கள், அதனை உள்ளே அழுத்தும் போது வெடிப்பை உருவாக்கும் வகையில் ஒரு தனித்துவமான பாப் ஓப்பனரைக் கொண்டுள்ளது.
இந்த மறுபெயரிடுதல், சர்வதேச சந்தைகளை கவர்ந்துள்ளது மட்டுமின்றி, கோலி சோடா ஒரு உற்சாகமான மற்றும் நவநாகரீக தயாரிப்பாக தனித்து நிற்க உதவியிருக்கிறது. உலக சந்தையில் கோலி சோடா தயாரிப்புக்கு ஏற்பட்டுள்ள தேவை, உள்நாட்டு இந்திய சுவைகள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என்பதை நிரூபிக்கிறது மற்றும் உள்நாட்டு ஏற்றுமதிகளுக்கு புதிய வழிகளையும் உருவாக்க காரணமாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
March 27, 2025 8:44 AM IST
Goli Soda: பெயர் மாற்றம்.. புதுமையான பேக்கேஜிங்.. சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் ‘கோலி சோடா’!


