Last Updated:
EPFO அக்கவுண்ட் வைத்திருக்கும் மில்லியன் கணக்கான உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, 2024-2025 (FY25) நிதியாண்டுக்கான வட்டியை கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர் அக்கவுண்ட்களிலும் வரவு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வரவேற்கத்தக்க நடவடிக்கையாக, EPFO எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation) 2024–25 நிதியாண்டுக்கான வட்டியை, 96%க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா சமீபத்தில் தெரிவித்தார்.
EPFO அக்கவுண்ட் வைத்திருக்கும் மில்லியன் கணக்கான உறுப்பினர்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு நடவடிக்கையாக, 2024-2025 (FY25) நிதியாண்டுக்கான வட்டியை கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர் அக்கவுண்ட்களிலும் வரவு வைத்துள்ளதாகவும், நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதம் வரவு வைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்பாட்டை கிட்டத்தட்ட முடித்துள்ளதாகவும் அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார்.
முன்னதாக நடப்பு நிதியாண்டிற்கு, 8.25% விகிதத்திற்கான ஒப்புதல் மே 22, 2025 அன்று மத்திய அரசால் அளிக்கப்பட்டது. இந்த புதிய வட்டி விகிதத்துடன் இதுவரை 32.40 கோடி உறுப்பினர்களின் அக்கவுண்ட்களுக்கு, உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியாக கிட்டத்தட்ட ரூ.4,000 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மீதமுள்ள அக்கவுண்ட்களுக்கான வட்டி இந்த வார இறுதிக்குள் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போதுமே நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, வருங்கால வைப்பு நிதி வைப்புத் தொகைக்கான வட்டியை உறுப்பினர்களின் அக்கவுண்ட்களில் வரவு வைப்பது என்பது பல மாதங்கள் இழுத்தடிக்கப்படும். ஆனால், முந்தைய ஆண்டுகளின் போக்கை இந்த ஆண்டு நடவடிக்கை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது.
2024 நிதியாண்டில் கூட EPFO உறுப்பினர்களின் அக்கவுண்ட்களில் வட்டியை வரவு வைக்கும் செயல்முறை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி டிசம்பரில் தான் நிறைவடைந்தது. முன்னதாக கடந்த ஆண்டைப் போலவே, 2025 நிதியாண்டிற்கும் 8.25% வட்டி விகிதத்தை அளிக்கும் முடிவு, மத்திய அமைச்சர் மாண்ட்வியா தலைமையில் நடைபெற்ற EPFO-வின் central board of trustees 237ஆவது கூட்டத்தின்போது எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2024-25ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதமாக 8.25%-ஐ கடந்த பிப்ரவரி 28 அன்று EPFO அறிவித்தது. இது பின்னர் இறுதி ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் மே 22 அன்று நிதி அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஓய்வூதிய சேமிப்பில் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய உதவும் பிற நிலையான வருமான திட்டங்களுடன் ஒப்பிடும்போது EPF ஒப்பீட்டளவில் அதிக மற்றும் நிலையான வருமானத்தை தொடர்ந்து வழங்குகிறது.
July 10, 2025 8:12 PM IST