வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராய்ப்பூர் : மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி தொடர்பான வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் போது, மகாதேவ் சூதாட்ட செயலி வாயிலாக நடந்த மோசடி விவகாரம் அங்கு பெரும் புயலை கிளப்பியது. அதில், அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தொடர்பு உள்ளதாகவும் புகார் எழுந்தது. இதில் நடந்த பண மோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பண மோசடி நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேல் மற்றும் அதிகாரிகள் மீதும் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பூபேஷ் பாகேலுடன், சூதாட்ட செயலி உரிமையாளர்களான ரவி உப்பால், சவுரப் சந்திரசேகர் , சுபம் சோனி மற்றும் அனில் குமார் அகர்வால் உள்ளிட்ட 14 பேர் மீது ஐபிசி 120 பி( கிரிமினல் சதி), 420 (ஏமாற்றுதல்) மற்றும் 471 ஆகிய பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement