இன்னொருபுறம் ட்ரம்ப்பின் இந்த நிர்வாக உத்தரவை எதிர்த்து பல மாகாணங்களைச் சேர்ந்த குடியேற்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதன்மூலம் இந்த உத்தரவு சட்டப்பூர்வ சவால்களை எதிர்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.
ஒரு நிர்வாக உத்தரவு என்பது நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றாலும், அரசியலமைப்பின் விதிகளை மாற்றுவது என்பது ஒரு நீண்ட மற்றும் கடினமான நடைமுறை.
இதற்கிடையில், அனைத்து நிர்வாகத் துறைகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களும் இந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான பொது வழிகாட்டுதலை 30 நாட்களுக்குள் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின் முதல் வரி இவ்வாறு கூறுகிறது: “அமெரிக்க குடியுரிமையின் சலுகை என்பது ஒரு விலைமதிப்பற்ற பரிசு”
இந்தச் சூழலில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் அடையாளம் கண்டு திரும்ப அழைக்கும் பணிகளை ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள சுமார் 18,000 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இருப்பினும், அமெரிக்காவில் மொத்தம் சட்டவிரோமாக எத்தனை இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியாததால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குடியுரிமை மற்றும் குடியேற்ற சீர்திருத்தம் தொடர்பான போராட்டம் தீவிரமடைந்து வரும் நேரத்தில், லட்சக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த சர்ச்சைக்குரிய கொள்கையை வடிவமைப்பதில் சட்ட சவால்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியில், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்றங்களை பொறுத்து இதன் விளைவு இருக்கும் என்கின்றனர் உலக அரசியல் நோக்கர்கள்.

