Last Updated:
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நியூஸ்18 குழுமத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த 24 மணி நேரத்தில் இன்னும் கணிசமான அளவில் வரி உயர்வு அறிவிக்கப்படும் என நியூஸ்18 குழுமத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பு முறையில் இந்தியாவிற்கு 26 சதவீத இறக்குமதி வரியை அறிவித்த டிரம்ப், அமெரிக்காவின் விடுதலை நாளை முன்னிட்டு ஒரு சதவீதம் குறைத்து 25 சதவீதமாக நிர்ணயம் செய்தார். அதன்படி, இந்தியாவிற்கான 25 சதவீத இறக்குமதி வரி நடவடிக்கை வரும் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து ராணுவ ஆயுதங்களையும், கச்சா எண்ணெய்யையும் வாங்கினால் ஏற்கெனவே உள்ள வரியுடன் கூடுதல் வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பது குறித்து டிரம்ப் மீண்டும் ஒருமுறை பதிவு செய்தார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவதோடு மட்டுமல்லாது, அதில் பெரும் பகுதியை சந்தையில் விற்று, அதிக லாபமும் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார்.
ரஷ்யாவின் போரால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்பட்டாலும் அவர்களுக்கு அக்கறை இல்லை எனவும், இந்த காரணத்திற்காக இந்தியா மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நியூஸ்18 குழுமத்தின், சி.என்.பி.சி. டிவி18 (cnbc tv18)க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர், “அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கான வரியை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
August 05, 2025 7:15 PM IST
Exclusive: ”24 மணி நேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி…” – நியூஸ்18 குழுமத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரத்யேக பேட்டி


