அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்த நிலையில், நெட்வொர்க் 18 குழுமத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“2025-ஆம் ஆண்டில் அமெரிக்க செனட் உறுப்பினராக இருந்தபோது, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஆதரித்தால், அந்த நாட்டுக்கான உதவியைக் குறைக்கும் வகையில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதாக கூறியிருந்தீர்கள். இதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?” என நெட்வொர்க் 18 குழும ஆசிரியர் ராகுல் ஜோஷி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மார்கோ ரூபியோ, ” உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் அதை நாங்கள் எதிர்க்கிறோம். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் யாராக இருந்தாலும் அவர்களையும் எதிர்க்கிறோம்.
ஆனால், தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், நான் முன்பு வகித்த செனட்டர் பதவியில் இல்லை. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதற்கு, சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு நாடுகளுடன் உறவுகளைப் பேண வேண்டிய அவசியம் உள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, அந்த நாட்டுடன் அமெரிக்கா உறவைப் பேண வேண்டியுள்ளது. அந்நாட்டிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. புவியியல் அமைப்பின் அடிப்படையிலும் அந்நாட்டுடன் தொடர்பில் இருப்பது அவசியமாகிறது.
இந்திய அரசும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் உறவுகளைப் பேணி, அந்த நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து வருகிறது. அதேபோன்ற சிக்கலான சூழலை நாங்களும் எதிர்கொள்கிறோம்.
இவை எளிதில் சமநிலைப்படுத்த முடியாத விஷயங்கள். இருப்பினும், வெளியுறவுக் கொள்கையின் ஒரு பகுதியாக இத்தகைய உறவுகளைப் பேண வேண்டியுள்ளது.
அதேநேரத்தில், ஒரு நாட்டுடன் உறவைப் பேணுவதால் அந்த நாட்டுடன் நேரடியாகப் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம், இந்தியா கவலைப்படும் வகையிலான நடவடிக்கைகளைத் தடுக்கவும், அவற்றைக் கைவிடுமாறு வலியுறுத்தவும் உதவ முடியும்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்களில் நிறைவேறும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். மும்பை விமான நிலையம் வந்தடைந்த மார்கோ ரூபியோ மற்றும் அவரது மனைவி ஜெனட் ரூபியோவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிசை சந்தித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மும்பையில் நடைபெறும் ஃபிரீடம் 250 எனும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மார்கோ ரூபியோ, தாஜ் ஹோட்டலில் உள்ள 2008 பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கும் மார்கோ ரூபியோ, இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டுமிட்டுள்ளார்.

