Last Updated:
Egg Price: தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்து வருகிறது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1300க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காகத் தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை கொள்முதல் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொடும் நிலையில், சில்லறை விற்பனையிலும் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்தில் இருக்கும் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் 5 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் கொள்முதல் விலை, 6 ரூபாய் 30 காசுகளிலிருந்து, 6 ரூபாய் 35 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. வரலாற்றில் இல்லாத வகையில் முட்டை விலை உயர்ந்துள்ள நிலையில், சில்லறை விற்பனையில் ஏற்கெனவே ஒரு முட்டையின் விலை குறைந்தபட்சமாக 7 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவுவதால், முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ளதால் கேக் தயாரிப்புக்காக முட்டையின் தேவை அதிகரித்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததால் விலை அதிகரித்துக்கொண்டே செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Namakkal,Tamil Nadu

