E20 பெட்ரோல் மூலம் இந்திய வங்கிகளுக்கு புது பிரச்சனை.. ரூ.1 லட்சம் கோடிக்கு என்ன பதில்..!
மோடி தலைமையிலான மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதத்தை சொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், வாகனங்களின் திறன் மற்றும் மைலேஜ் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் வாகனங்களின் இன்ஜின்கள் அதிகளவில் பழுதாகிறதாகவும் வாகன ஓட்டிகள் கூறிவரும் வேளையில் மத்திய அரசு E25 பெட்ரோலுக்கான சோதனையை துவங்கியுள்ளது. இதோடு தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் இதுநாள் வரையில் E20 பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை தான் தயாரித்து வருகிறது, தற்போது E25 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் பெரிய பிரச்சனையாக மாறும்.

இப்படி பல பிரச்சனைகள் இணைந்து மக்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியிருக்கும் வேளையில் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது, அதுதான் வங்கி கடன். மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரிக்க திட்டமிட்ட நாளில் இருந்து இந்தியா முழுவதும் எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க வங்கிகள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான கடன்களை அளித்துள்ளது.
இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு E20 பெட்ரோலில் இருந்து E10 பெட்ரோலுக்கு மாறினால் வங்கிகள் கொடுத்த கடனின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாக மாறும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தற்போது E20 பெட்ரோல் பயன்படுத்தும் வாகனங்களில் மைலேஜ் 3-5 சதவீதம் வரையில் குறைகிறது என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் E20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் பாகங்கள் சேதம் அடைகிறது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதோடு தூய பெட்ரோலை காட்டிலும் E20 பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கான விளக்கத்தையம் மத்திய அரசு தரப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.
எத்தனால் உற்பத்திக்கான உள்கட்டமைப்பை உருவாக்க பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளது, இதற்கான கடன் சுமையை குறைக்கும் விதமாக எண்ணெய் நிறுவனங்கள் E20 பெட்ரோல் மூலம் கிடைக்கும் லாபத்தை முழுமையாக அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் E20 பெட்ரோலில் இருந்து E10 பெட்ரோலுக்கு மாறினால் ஒட்டுமொத்த எத்தனால் எகோசிஸ்டம் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என பெட்ரோலியம் மற்றும் இயற்கைஎரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

