ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த 8 மாதங்களில், இரண்டு முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்கு வர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பரஸ்பர குற்றச்சாட்டுக்களை கூறிக்கொண்டே இரு தரப்பும் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதித்ததால், அமைதி ஒப்பந்தம் ஏற்படவே இல்லை. இது மட்டுமல்லாமல், அமெரிக்கா- ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய போதெல்லாம், இஸ்ரேல் தலையிட்டு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு ஒப்பந்தம் ஏற்படாமல் பார்த்துகொண்டது.
ஈரான் உடனான போரிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்பது டிரம்பின் விருப்பமாக உள்ளது. ஈரான் மீது எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் எடுக்காமல் போரிலிருந்து விலகினால், அமெரிக்கா தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழும். ஆனால், போரிலிருந்து அமெரிக்கா உடனடியாக விலக வேண்டும் என்பது அமெரிக்க மக்களின் கருத்தாக உள்ளது.
போரிலிருந்து விலகும் முன், ஒரு “அதிரடி வெற்றியைக்” காட்ட வேண்டும் என திட்டமிடுகிறார் அதிபர் டிரம்ப். ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இருக்கவே கூடாது என்பதில் உறுதியாக உள்ள டிரம்ப், அதற்கு தேர்வு செய்திருப்பதுதான் ‘mother of all bombs’. இவை அதிநவீன குண்டுகளை ஈரானின் அணு சக்தி மையங்கள் மீதும் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதும் வீசி அழித்துவிட்டு போரை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அது என்ன ‘Mother of all Bombs’?
இதன் ராணுவப் பெயர் GBU-43/B Massive Ordnance Air Blast சுருக்கமாக MOAB. இது அமெரிக்க ராணுவக் களத்தில் உள்ள மிகப்பெரிய அணு ஆயுதமல்லாத அதாவது Non-nuclear குண்டாகும். இதன் எடை சுமார் 9.8 டன்கள். நிலத்திற்குள் ஆழமாகச் சென்று தாக்கும் Bunker-buster குண்டுகளைப் போல் அல்லாமல், இந்த குண்டு தரையைத் தொடுவதற்கு முன்பாகவே காற்றில் வெடித்து, அதன் பேரழிவைச் சுற்றுப்புறங்களுக்கு பரப்பும் தன்மைக் கொண்டது.
ஈரான் – அமெரிக்கா
கிட்டத்தட்ட ஒன்பது City blocks பரப்பளவை முழுமையாக அழிக்கக்கூடிய வல்லமை படைத்தது. அமெரிக்கா- ஈராக் போரின் போது தான் இந்தக் குண்டு உருவாக்கப்பட்டது. ஈராக் படைகளை உளவியல் ரீதியாகப் அச்சமடைய செய்வதற்கும், அவர்களின் பதுங்கு குழிகளையும் ஒரே அடியில் தகர்ப்பதற்கு வெறும் 9 வாரங்கள் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. ஆனால் அந்த போரில் இந்த குண்டை அமெரிக்கா பயன்படுத்தவில்லை.
2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்த ISIS சுரங்க வளாகத்தை தகர்க்க முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. அப்போது ISIS இயக்கத்தைச் சேர்ந்த 36 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் வெடி மருந்துகளும் அழிக்கப்பட்டன. 1991- ஆம் ஆண்டு வளைகுடாப் போரின் போது ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் பயன்படுத்திய “Mother of all battles” என்ற வார்த்தையிலிருந்து ஈர்க்கப்பட்டு, இந்த குண்டுக்கு ‘mother of all bombs’ என பெயர் சூட்டப்பட்டது. இதன் பிரம்மாண்டமான எடை மற்றும் அளவு காரணமாக, இதை வழக்கமான போர் விமானங்களால் சுமந்து செல்ல முடியாது. இதற்காக, MC-130 Combat Talon போன்ற ராட்சத சரக்கு விமானங்களின் பின்புறப் பகுதியில்தான் பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும்.
எப்படி செயல்படும் இந்த குண்டு?
இந்தக் குண்டு விமானத்திலிருந்து கீழே வீசப்படும் விதம் மிகவும் சுவாரசியமானது. இது ஈர்ப்பு விசையால் தானாகக் கீழே விழாது. விமானத்தின் பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு, ஒரு பிரம்மாண்டமான பாராசூட்டின் உதவியோடுதான் வெளியே தள்ளப்படும். விமானத்தைவிட்டு வெளியேறியதும் பாராசூட் கழன்றுவிடும். அதன் பிறகு GPS வழிகாட்டல் அமைப்பு மூலம், குண்டு இலக்கை நோக்கிச் செல்லும்.
மற்ற குண்டுகள் தரையைத் தாக்கிய பிறகு வெடிக்கும். ஆனால், MOAB குண்டு தரையைத் தொடுவதற்கு சுமார் 6 அடி உயரத்தில் இருக்கும்போதே காற்றில் வெடித்துவிடும். இந்த குண்டுகள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி மிகப்பெரிய தீப்பந்தத்தை உருவாக்கும். அதைத் தொடர்ந்து ஏற்படும் Secondary blast அந்தப் பகுதியையே முழுமையாக அழித்துவிடும்.
குண்டு தரையில் மோதி வெடித்தால், அந்த வெடிப்பின் சக்தி நிலத்திற்கு அடியில் வீணாகிவிடும். ஆனால், தரையிலிருந்து சற்று உயரத்தில் வெடிக்கும்போது, அந்த வெடிப்பு உருவாக்கும் Shockwaves பக்கவாட்டில் அனைத்து திசைகளிலும் சமமாகப் பரவும். இது அருகே உள்ள கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை மிக எளிதாகத் அழிக்க உதவும். வெடிக்கும் போது அந்தப் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் முழுவதையும் அந்தத் தீப்பந்தம் உறிஞ்சிவிடுகிறது. இதனால் அந்த இடத்தில் Vacuum உருவாகிறது.
இந்த வெற்றிடத்தினால் காற்று அதிவேகமாக மையப்பகுதியை நோக்கி இழுக்கப்பட்டு, மீண்டும் வெளியே தள்ளப்படுகிறது. இந்த அதீத காற்று அழுத்த மாறுபாடு அதாவது Overpressure மனிதர்களின் நுரையீரலைச் சேதப்படுத்துவதுடன், பதுங்கு குழிகளில் உள்ளவர்களையும் மூச்சுத் திணறச் செய்து கொன்றுவிடும்.
இந்தக் குண்டுகளில் PBXN-111 எனப்படும் உயர் ரகக் கலவை வெடிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. இது அலுமினியம், HMX மற்றும் RDX போன்ற அதிநவீன வேதிப்பொருட்களின் கலவையாகும். வழக்கமான வெடிமருந்துகளை விட அதிக சக்தியைக் கொண்டதுடன், காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் சேர்ந்து எரியும் தன்மை கொண்டது. இந்தக் குண்டு காற்றில் வெடிக்கும்போது ஒரே ஒரு முறை வெடிப்பதில்லை, மாறாக மிகத் துல்லியமான இரண்டு கட்டங்களாகச் செயல்படுகிறது.
ரஷ்யா உருவாக்கிய Father of All Bombs?
முதல் கட்டமாக குண்டு தரையை நெருங்கும் முன், உள்ளே இருக்கும் வெடிபொருள் மேகம் போலச் சுற்றுப்புறக் காற்றில் அதிவேகமாகப் பரவும். ஒரு விநாடி இடைவெளியில், அந்த எரிபொருள் தீப்பற்றிக் கொள்ளும். அமெரிக்கா இந்த MOAB குண்டை உருவாக்கியதைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக ரஷ்யா Father of All Bombs என்ற பெயரில் இன்னும் சக்திவாய்ந்த அணு ஆயுதமல்லாத குண்டை 2007 ஆம் ஆண்டில் உருவாக்கியது. அது MOAB-ஐ விட நான்கு மடங்கு அதிக அழிவுத்திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
ஈரான் – அமெரிக்கா
ஈரானின் மிக முக்கியமான அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் நிலத்திற்கு அடியில், பல நூறு அடி ஆழத்தில், தடிமனான கிரானைட் பாறைகளுக்குக் கீழே மிகப் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. MOAB என்பது திறந்தவெளியில் உள்ள இலக்குகளை அழிக்கவே உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, நிலத்திற்குள் ஆழமாகச் சென்று தாக்கும் Bunker-buster குண்டு அல்ல. எனவே, ஈரானின் மிக முக்கியமான நிலத்தடி அணுசக்தி மையங்களை இதனால் முழுமையாக அழிக்க முடியாது.
இதுபோன்ற குண்டுகளின் பயன்பாடு ஈரானுக்கு Psychological Pressure-ஐ உருவாக்கலாமே தவிர, அந்த நாட்டைச் சரணடையச் செய்யவோ அல்லது போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரவோ உதவாது என ராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற ஒரு அதிவேகத் தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரான் பதிலடித் தாக்குதல்கள் நடத்தும். இது போரை மேலும் நீட்டிக்கச் செய்யுமே தவிர, அமெரிக்காவிற்கு ஒரு வெற்றிகரமான முடிவைத் தராது.
மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது இத்தகைய குண்டுகள் வீசப்பட்டால், பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்படும் அபாயம் உள்ளது. இது சர்வதேச அளவில் அமெரிக்காவிற்குத் கடுமையான கண்டனங்களை பெற்றுத் தரும்.
எங்கு இந்த MOAB விழும்?
ஈரானின் அணுசக்தி தளங்கள் அமைந்துள்ளதாகக் கருதப்படும் Pickaxe மலைப்பகுதி மீது இந்த ‘mother of all bombs’-ஐ பயன்படுத்தும் திட்டத்தை அமெரிக்கா வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இது ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நதான்ஸ் (Natanz) அணுமின் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் Operation MidNight Hammer நடவடிக்கையின் போது, ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது Bunker Buster குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் தனது Advanced Centrifuge-களை உற்பத்தி செய்யவும் அணுசக்தி நடவடிக்கைகளைத் தொடரவும் இந்த Pickaxe மலைக்கு அடியில் புதிய சுரங்க வளாகங்களை கட்டியது. இந்த Pickaxe மலை மிகக் கடினமான கிரானைட் பாறைகளைக் கொண்டு இயற்கையாகவே அரண் செய்யப்பட்ட ஒரு பகுதி. இதன் முக்கிய அரண்கள் தரைமட்டத்திலிருந்து நூறு மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் சுரங்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
வெறும் வான்வழித் தாக்குதல்களும், அதுவும் நிலத்தடி அரண்களைத் துளைக்க முடியாத மேலோட்டமான குண்டுவீச்சுகளும் ஈரானை சரணடையச் செய்யப் போவதில்லை; மாறாக, இது மத்திய கிழக்கில் மேலும் ஒரு நீண்ட போருக்கு வழிவகுத்து, பிராந்திய அமைதியைக் குலைக்கும் அபாயத்தையே ஏற்படுத்தும். எனவே, போரிலிருந்து வெளியேறத் துடிக்கும் அமெரிக்காவிற்கு இந்த அதிரடித் திட்டம் ஒரு நிரந்தரமான அரசியல் அல்லது ராணுவ வெற்றியைத் தராது என்பதே தற்போதைய கள யதார்த்தமாகும்.
