Last Updated:
தர்மஸ்தலா சென்ற தனது மகள் அனன்யா பட் காணாமல் போனது குறித்து பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் அவரது தாய் என்று கூறப்படும் சுஜாதா பட் புகார் அளித்திருந்தார்.
கர்நாடக மாநிலம், தர்மஸ்தலா கோயில் நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைக்கப்பட்டதாக கோயிலில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் கூறியதைத் தொடர்ந்து, மாநில அரசு, 20 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
அந்தக் குழுவினர் முன்னிலையில் முன்னாள் ஊழியர் சுட்டிக்காட்டிய 16 இடங்களில் நேத்ராவதி ஆற்றங்கரையில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சில குழிகளில் பெண்களின் எலும்புக் கூடுகளும், சேலையும் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகுபலி மலைப்பகுதியிலும் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, இந்த வழக்கில் தர்மஸ்தலா சென்ற தனது மகள் அனன்யா பட் காணாமல் போனது குறித்து பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் அவரது தாய் என்று கூறப்படும் சுஜாதா பட் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் தான் பொய் கூறியதாகவும், தனக்கு அப்படியொரு மகளே இல்லை என்றும் சுஜாதா பட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-
எனக்கு அனன்யா பட் என்ற மகள் இருந்தாள் என்பது பொய். நான் அப்படிச் சொன்ன ஒரு சூழ்நிலை இருந்தது. கிரிஷ் மட்டன்னா மற்றும் ஜெயந்த் டி போன்றவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்கள்.
அனன்யா பட் என்ற மகள் இருப்பது பற்றிய முழு விஷயமும் போலியானது, நான் மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடியதில்லை. இருப்பினும், சிலர் மக்களின் உணர்ச்சிகளுடன் விளையாடினார்கள்.
August 22, 2025 10:49 PM IST
Dharmasthala Case: தர்மஸ்தலா வழக்கில் முக்கிய திருப்பம்.. அனன்யா என்ற மகளே தனக்கு இல்லை என சுஜாதா பட் பேட்டி


