Last Updated:
Delhi Red Fort அருகே மெட்ரோ கார் பார்க்கிங்கில் இரண்டு கார்கள் வெடித்து 9 பேர் பலி, 13 வாகனங்கள் சேதம், விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் வெடித்துச் சிதறியது. இரண்டு கார்கள் வெடித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த 13 வாகனங்கள் வரை சேதமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடி விபத்தில் இதுவரை 9 பேர் வரை பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த வெடிவிபத்து திட்டமிட்ட சதியா அல்லது விபத்தா என்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேசமயம், ஹரியானா மாநிலத்தில் பயங்கர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், ஏழு பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடி விபத்தை நேரில் பார்த்த மற்றும் அந்தப் பகுதிக்கு அருகே இருந்தவர்கள் இது குறித்து விவரித்துள்ளனர். அதன்படி அந்த இடத்தில் இருக்கும் ஒருவர் பேசும்போது, “நாங்கள் இங்கு வந்து பார்த்தபோது மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. சில வாகனங்கள் சேதம் அடைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
அதேபோல், மற்றொருவர், “இதுபோன்ற வெடி சத்தத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் கேட்டதே இல்லை. மூன்று முறை வெடி சத்தம் கேட்டதை நான் உணர்ந்தேன். அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் மரணிக்க போகிறோம் என்றே நினைத்தேன்” எனத் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தின் அருகே வீட்டில் இருந்த ஒரு முதியவர் பேசும்போது, “தீ எரிவதை என் வீட்டில் இருந்து பார்த்தேன். அதன் பிறகு உடனடியாக கீழே வந்து என்ன நடக்கிறது என பார்க்க வந்தேன். பெரும் சத்தத்துடன் வெடித்தது” எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய டெல்லி காவல்துறை அதிகாரிகள் “தற்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. விசாரணை நடந்துவருகிறது” எனத் தெரிவித்தனர்.
November 10, 2025 8:10 PM IST
Delhi Red Fort Blast | “மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன” – சம்பவ இடத்தில் இருந்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்


