Last Updated:
டெல்லி சட்டப்பேரவைக்கான 70 தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்கவுள்ளது. 2020 தேர்தலில் ஆம் ஆத்மி எந்தெந்த இடங்களில் வென்றது. எந்த வாக்குகள் கைக்கொடுத்தன என்பதை பார்ப்போம்.
டெல்லி சட்டப்பேரவைக்கான 70 தொகுதிகளில் நாளை (பிப். 5ஆம் தேதி) தேர்தல் நடக்கவுள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை பார்ப்போம்.
டெல்லியில் உள்ள மொத்த 70 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 53.82% வாக்குகளைப் பெற்று 62 தொகுதிகளை கைப்பற்றியது. அதேபோல், பாஜக கூட்டணி 39.95% வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் 4.32% சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன்படி ஆம் ஆத்மி ஆட்சியை அமைத்தது.
அதேசமயம் 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தன. இதில், மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் அனைத்தையும் பாஜக கைப்பற்றியது. இதில் 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி இரண்டாம் இடத்தையும், 3 தொகுதிகளில் காங்கிரஸும் இரண்டாம் இடம் பிடித்தன.
இதையும் படியுங்கள் : திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்
தற்போது 2025 சட்டமன்றத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லியில் 30% இஸ்லாமியர்கள் வாக்குகள் இருக்கின்றன. இவை 10 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி அந்த 10 தொகுதிகளிலும் 60.15% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தது. பாஜக கூட்டணி 33.86% வாக்குகளைப் பெற்றது.
அதேபோல் ஜாட் சமூகத்தின் வாக்குகளும் 12 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி இந்த 12 தொகுதிகளிலும் 51.93% வாக்குகளைப் பெற்று 12 தொகுதியையும் வென்றது. அதேசமயம் பாஜக கூட்டணி அந்தத் தொகுதிகளில் 42.73% வாக்குகளைப் பெற்றது.
இதேபோல், டெல்லியில் 12 தனி தொகுதிகள் உள்ளன. இந்த 12 தொகுதிகளிலுமே கடந்த முறை ஆம் ஆத்மி 57.98% வாக்குகளைப் பெற்று மொத்தமாக வெற்றியடைந்தது. பாஜக கூட்டணி 35.96% வாக்குகளைப் பெற்றிருந்தது.
இந்தப் பின்னணியில் தற்போது மும்முனை போட்டியில் இருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எவ்வளவு சதவீத வாக்குகளைப் பெற்று, எத்தனை தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் எனும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நாளை (5ஆம் தேதி) பதிவாகும் வாக்குகள் வரும் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
February 04, 2025 5:04 PM IST
Delhi Election 2025 | டெல்லியில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கப்போவது யார்? – முந்தைய தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?


